Current Affairs for Competitive Examination-2018 | 22-03-2018-Free Download இன்றைய நடப்பு நிகழ்வுகள்



Current Affairs for Competitive Examination-2018
TNPSC,TRB/TET
SLET


ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற தமிழ்ப் பெண்!சிட்னியில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் தமிழ்ப் பெண் இளவேனில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். குஜராத்தில் வசிக்கும் 18 வயது தமிழ்ப் பெண்ணான இளவேனில், 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 249.8 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். தகுதிச்சுற்றின் முடிவில் 631.4 புள்ளிகள் பெற்று ஜூனியர் உலக சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச அளவில் அவர் பங்குபெறும் இரண்டாவது போட்டி இது. கடந்த வருடம் ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் 28-வதாக வந்த இளவேனில், இந்தமுறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் பங்கேற்ற இதர இரு இந்திய வீராங்கனைகள் ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளார். மேலும் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் இந்தியாவின் இளவேனில், ஸ்ரேயா, ஜீனா ஆகிய மூவரும் இணைந்து தங்கம் வென்றுள்ளார்கள். இளவேனிலின் இச்சாதனைக்கு பிரபல  துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.



2018-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒட்டுமொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.312 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போட்டி இயக்குநர் 
கை ஃபார்கெட் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பரிசுத் தொகையானது சுமார் ரூ.24 கோடி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, 2018-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்பவர்கள் தலா ரூ.17.62 கோடி பரிசுத் தொகையாக 
பெறவுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சாம்பியனுக்கான பரிசுத் தொகை ரூ.80 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் மே 27 முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. உலக அணிகள் கோப்பைக்கு எதிர்ப்பு: இதனிடையே, தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான சங்கம் (ஏடிபி), உலக அணிகள் கோப்பை போட்டியை மறு அறிமுகம் செய்வதற்கு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்தும் ரோலண்ட் கேரோஸ் அமைப்பின் இயக்குநர் கை ஃபர்கெட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியானது ஒரு சீசன் முழுவதுமாக 4 வார இறுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் நவம்பர் மாத இறுதி வாரத்தில் மட்டும் அந்தப் போட்டியை நடத்துவதென திட்டமிட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இதனிடையே, 2020 ஜனவரி மாதம் உலக அணிகள் கோப்பை டென்னிஸ் போட்டியை மீண்டும் நடத்த ஏடிபி முனைவதாக கூறப்படுகிறது. டேவிஸ் கோப்பை போட்டிக்குப் பிறகு 2 மாத இடைவெளியில் உடனே நடத்தப்படும் இந்த உலக அணிகள் கோப்பை போட்டியால், டேவிஸ் கோப்பை டென்னிஸுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



சென்னை அரசு பொது மருத்துவமனையில் திருநங்கைகள் (மூன்றாம் பாலினம்) எஸ்.நேயா மற்றும் எம்.பி.செல்வி சந்தோசம் ஆகியோர் வார்டு மேலாளராக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் இவர்கள் முறையான பணியிடத்தில் நியமனம் செய்யுமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.எஸ்.நேயா, நுண்ணுயிரியல் படிப்பில் முதுகலைப் பட்டமும், எம்.பி.செல்விசந்தோசம் இயன்முறை சிகிச்சைப் படிப்பில் பட்டயமும் பெற்றிருந்ததால் பரிசீலனை செய்த தமிழக அரசு, இவர்கள் அதிக கல்வித் தகுதி பெற்று இருந்தும், வயது வரம்பை கடந்து விட்டதால், இவர்களின் கோரிக்கையை சிறப்பு நேர்வாக ஏற்றது. இவர்களை அரசு பொது மருத்துவமனையில் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்ய  அரசு முடிவு செய்தது. அதன்படி எஸ்.நேயாவை ஆய்வக நுட்புனர் நிலை-2 மற்றும் எம்.பி.செல்வி சந்தோசத்தை இயன்முறை சிகிச்சையாளர் நிலை-2 ஆகிய  பணிகளில் நியமித்து, அதற்கான பணி நியமன ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார். 


018-ம் ஆண்டு நாடு முழுவதும் 52 பல்கலைக்கழகங்களுக்கும் 2 கல்லூரிகளுக்கும் யுஜிசி தன்னாட்சி அந்தஸ்து வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களான போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம், வேலூர் விஐடி பல்கலைகக்கழகம், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கோவை அமிர்தா பல்கலைக்கழகம், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகிய 7 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் ஏவுகணை சோதனை மையத்தில் இருந்து இன்று காலை 8.42 மணிக்கு சூப்பர் சோனிக் பிரமோஸ் ஏவுகணை வெற்றிக்கரமாக  சோதனை செய்யப்பட்டது.  இது ஒரு இந்தியா-ரஷ்யா இணைந்து செய்யும் கூட்டு முயற்சியாகும்.  2.8  ஒலியின் வேகத்தில்  290 கிமீ தூரத்தில் இலக்கை சென்று தாக்கும் தன்மை கொண்டது. சூப்பர்சோனிக் ரக ஏவுகணையான பிரமோஸ் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. ராஜஸ்தானின் பொக்ரான் தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை  வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ஏவுகணை 
290 கி.மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்று இலக்கை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பான MTCR -ல் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா உறுப்பினர் ஆனதன் மூலம்,  இந்தியா- ரஷ்யா கூட்டுத்தயரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணையில் சில தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை அகற்றும் ஒப்புதல் கிடைத்தது. இதன்மூலம், ஏவுகணை செல்லும் தூரத்தை 400 கி.மீட்டர் வரை நீட்டிக்க முடியும்.  பிரமோஸ் சூப்பர்சோனிக்  ஏவுகணையை  சுகோய்-40 ரக போர் விமானம் மூலம் செலுத்தவைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 



காசநோயாளிகள் குறித்த தகவலை தெரிவிக்காவிட்டால் டாக்டர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  காசநோய்க்கு தேவையான மருந்துகளையும், அவர்கள் குறித்த விவரங்களையும் டாக்டர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆய்வகங்கள், ரத்த பரிசோதனை மையங்களிடம் இருந்து காச நோயாளிகள் குறித்த விவரங்களை பொது சுகாதார மைய அலுவலர்கள் சேகரித்து வைக்க வேண்டும்.  2025–ம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார். எனவே ஒருவருக்கு காச நோய் இருப்பது தெரிந்தால் உடனே உள்ளூர் காசநோய் சிறப்பு சுகாதார மையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவலை தெரிவிக்காத டாக்டர்கள், மருந்தாளுனர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மீது அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சீன விண்வெளி நிலையம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் மீது விழுந்து நொறுங்கும் அபாயம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011-ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 டன் எடைகொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2016-ஆம் ஆண்டுடன் தனது கட்டுப்பாட்டை முற்றாக இழந்துவிட்டது. இந்த நிலையில் டியாங்கோங் - 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மணிக்கு சுமார் 27,000 கிலோ மீட்டர் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் – 1, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது எரியத் தொடங்கிவிடும். எனினும் முற்றாக எரியாத நிலையில் பெரும்பாலான பகுதிகள் பூமியில் மோதக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது. சீன விண்வெளி நிலையம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களில் மீது விழுந்து நொறுங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மார்ச்  30 ந்தேதி முதல் ஏப்ரல் 6 ந்தேதிக்குள் நிகழலாம்.  கடந்த 2016-ஆம் ஆண்டு டியாங்கோங் – 1  என்ற சீன விண்வெளி நிலையம் அதன் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு சுற்றி வருகிறது.









EmoticonEmoticon