Current Affairs for Competitive Examination-2018 | 29-03-2018-Free Download இன்றைய நடப்பு நிகழ்வுகள்




Current Affairs for Competitive Examination-2018
TNPSC,TRB/TET/SLET

மின்சார பேருந்துகள் கொள்முதல்: சி-40 நிறுவனத்துடன் தமிழகம் ஒப்பந்தம்
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. சி-40 என்ற தனியார் முகமையுடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:- மின்சார பேருந்து திட்டத்தை உலக அளவில் 26 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இங்கிலாந்து நாட்டின் சி-40 என்ற நிறுவனம் மின்சாரப் பேருந்துகளை பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மாசுபாட்டினை குறைத்தல், பசுமைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை உலகளாவிய அளவில் மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் மின் பேருந்து: தமிழகத்திலும் பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் மின்சார பேருந்து திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



இணைய வழி பத்திர ஆவணங்கள் சரிபார்ப்பு: ஏப்ரல் 4 முதல் புதிய நடைமுறை அமல்
பதிவுத் துறையில் இணைய வழியில் பத்திர ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. தமிழகத்தில் இணைய வழி பத்திரப் பதிவு நடைமுறை அமலில்உள்ளது. இதில், ஆவணங்கள் இணையவழி முன்சரிபார்ப்புக்கு அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்படும் ஆவணங்களை மூன்று நாள்களுக்குள் சரிபார்த்து ஆவணதாரருக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இந்த முன்சரிபார்ப்புக்கு ஆவணதாரர்கள் வருவது என்பது, முதலில் வருவோருக்கு முன் உரிமை என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பொது மக்களுக்கும் ஒரே கால அளவில் வரிசையாக சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. ஆனாலும், இந்த வசதியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லாத ரசீது போன்ற ஆவணங்களும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற நடைமுறையால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.எனவே, இந்த காத்திருப்பைத் தவிர்க்கும் வகையில், ஆவணங்களின் தன்மைக்கு ஏற்ப முன்சரிபார்ப்புக்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, பொது அதிகாரம், தனி அதிகாரம், ரசீது, உயில், கிரைய உடன்படிக்கை, உயில் ரத்து, சுவீகாரம்-தத்து, கடன் ஒப்புகைச்சீட்டு ஆகிய ஆவணங்களை ஒரு வேலை நாள் அவகாசத்தில் முடித்திட வேண்டும்.இதேபோன்று, விற்பனை-கிரையம், கட்டுமான உடன்படிக்கை, சுவாதீனமல்லாத அடமானம், சுவாதீனத்துடன் கூடிய அடமானம், உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, செட்டில்மென்ட், தானம், பரிவர்த்தனை, முன் அடமானதாரருக்கு கிரையம், செட்டில்மென்ட் ரத்து, கூட்டுப் பங்கு, பொறுப்பு-டிரஸ்ட் போன்றவற்றுக்கான ஆவணங்களை மூன்று வேலை நாள்களில் முடிக்க வேண்டும்.மேலும், பாகம், குத்தகை, விடுதலை, பிழை திருத்தல், சம்மதம், கூட்டுப்பங்கு கலைப்பு ஆகியவற்றுக்கான ஆவணங்களை ஐந்து வேலை நாள்களில் சரிபார்த்து அளிக்க வேண்டும். ஆவணங்கள் இணையவழி உரிய ஆதாரங்களுடன் முன்சரிபார்ப்புக்கு அனுப்பப்படும் போது சார்-பதிவாளர்கள் அதனைக் குறிப்பிட்ட காலத்துக்குள் சரிபார்த்து, இணையவழி ஒப்புதலை அளிக்க வேண்டும்.ஒரு வேலை நாளின் காலை 10 மணியில் இருந்து மறு வேலை நாளின் காலை 10 மணி வரையில் அனுப்பப்பட்ட ஆவணங்களை மாலை 5.45-க்குள் திருப்பி அனுப்ப வேண்டும். இந்தப் புதிய நடைமுறை ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.


ஏப்ரல் முதல் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆதார் கட்டாயம்
இனி டிரைவிங் லைசென்ஸ் பெற ஏப்ரல் 1அம் தேதி முதல் ஆதார் இணைக்க கட்டாயமாகிறது.
இதுவரை கெடுபிடி செய்து கொண்டிருக்கும் போக்குவரத்துக் காவல்துறை மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு, இன்னொரு ஆயுதத்தைக் கையில் வசதியாகக் கொடுத்தது போல், ஒரிஜினல் லைசென்ஸ் இல்லாதவரைப் பிடித்து அபராதம் வசூலிக்கலாம். மூன்று மாதம் சிறையில் தள்ளலாம், என்ற அதிகாரம், அலுவலகப் பணிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், கூலி வேலைகளுக்கும், கட்டிட வேலைகளுக்கும் இருசக்கர வாகனத்தில் செல்லும் சாதாரண சாமானிய மக்கள் ஆகியோக்கு தாங்கமுடியாத அவதிகளையும், அலைச்சல்களையும் அளிக்கும்.



அம்பேத்கார் பெயரில் 'ராம்ஜி' சேர்க்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவு
உத்தரப்பிரதேசத்தில் அரசு ஆவணங்களில் இனி அம்பேத்காரின் பெயரை 'ராம்ஜி' அம்பேத்கார் என சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நாள் வரை டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்ற குறிப்பிட அவரை இனி டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் என்றே இனி குறிப்பிட வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச கவர்னர் ராம் நாயக் பரிந்துரையை ஏற்று, உத்தரப்பிரதேச அரசு அம்பேத்காரின் பெயரை மாற்றி அமைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. 



சீன அதிபரை சந்தித்துப் பேசினார் கிம் ஜோங்-உன்: அணு ஆயுதத்தை கைவிடுவதாக உறுதி
29th March 2018 ஷீ ஜின்பிங்குடன் கைகுலுக்கும் கிம் ஜோங்-உன் (இடது).சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், அங்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதாக அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.அந்தச் சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக ஆக்குவதற்கு கிம் ஜோங்-உன் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், அங்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதாக அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.அந்தச் சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக ஆக்குவதற்கு கிம் ஜோங்-உன் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.


பூமி போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏக்ஸ்-மார்செய்லே பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள வார்விக் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், பூமியைப் போன்று நிறையுள்ள புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கே2-229பி (K2-229b) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகமானது பூமியை விட 20 சதவீதம் பெரியதாகவும், 2,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் கொண்டதாக இருக்கிறது. இந்த கிரகம் தனது நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் அமைந்திருப்பதால் அங்கு அதிக அளவிலான வெப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.அந்த கிரமானது தனது நட்சத்திரத்தை 14 மணி நேரத்துக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இந்த புதிய கிரகத்தை கே2 (K2) என்ற தொலைநோக்கியின் மூலமாக கண்டுபிடித்ததால், இந்த கிரகத்துக்கு கே2-229பி (K2-229b) என்று பெயரிட்டுள்ளனர்.


முதலில் வருவோருக்கு முன்னுரிமை : பத்திரப்பதிவு சாப்ட்வேரில் மாற்றம்
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், ஆன்லைன் முறை பத்திரப்பதிவுக்கான சாப்ட்வேரில், பதிவுத்துறை மாற்றங்களை அறிவித்துள்ளது.தமிழகத்தில், ஆன்லைன் முறையிலான பத்திரப்பதிவு, இந்தாண்டு, பிப்., 13ல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, பத்திரங்களை வரிசை எண் அடிப்படையில் மட்டுமே, சார் - பதிவாளர்கள் சரி பார்க்க முடியும். இதனால், சில பத்திரங்களின் ஆய்வுக்கு நீண்ட நேரம் தேவைப்படும் நிலையில், குறைந்த நேரத்தில் முடிய வேண்டிய பல பத்திரங்கள், பதிவுக்கு காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், முத்திரைத்தீர்வை மற்றும் பத்திரங் களுக்கான கூடுதல் பதிவுத்துறை தலைவர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கை:ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான சாப்ட்வேரில், முதலில் வருவோருக்கு முதலில் உரிமை என்ற அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. திருத்தங்கள் செய்யப்பட்டு, புதிய சாப்ட்வேர், ஏப்., 4ல் பயன்பாட்டுக்கு வரும். இதன் பின், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பத்திரங்களை, சார் - பதிவாளர்கள் சரிபார்க்க வேண்டும்.இத்துடன், பொது அதிகாரம், தனி அதிகாரம், உயில், கிரைய ஒப்பந்தம் உள்ளிட்ட பத்திரங்களை, ஒரு நாளில் சரி பார்க்க வேண்டும். விற்பனை, கட்டுமான ஒப்பந்தம் உள்ளிட்ட, 15 வகை ஆவணங்களை சரி பார்க்க, மூன்று நாள்; மற்ற பத்திரங்களை சரி பார்க்க, ஐந்து நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்.



ரேஷன் முறையில் மாற்றம் ; ஊழியர் எதிர்ப்பால் நிறுத்தம்
ரேஷன் பொருட்களை, கிடங்கில் இருந்து, ஊழியர்களே எடுத்து செல்லும் சோதனை முயற்சியை, கூட்டுறவு துறை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு சங்க சேமிப்பு கிடங்குகளில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு, உணவு பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. அவ்வாறு சப்ளை செய்யும்போது, ரேஷன் கடைகளில், எடை குறைவாக தரப்படுகிறது. இதனால், எடை இழப்பை சமாளிக்க, ஊழியர்கள், மக்களுக்கு பொருட்களை வழங்கும்போது, தில்லுமுல்லு செய்கின்றனர்.இதையடுத்து, கிடங்கில் இருந்து, ரேஷன் ஊழியர்களே, பொருட்களை எடுத்து செல்லும் முறையை அமல்படுத்த, கூட்டுறவு துறை முடிவு செய்தது. அது, அடுத்த மாதம் முதல், கோவை, கடலுார் மாவட்டங்களில், சோதனை ரீதியாக செயல்படுத்தப்பட இருந்தது. இதற்கு, ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து, நமது நாளிதழிலும், சில தினங்களுக்கு முன், விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, புதிய முறையை, கூட்டுறவு துறை, வாபஸ் பெற்றுள்ளது.இது தொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கடலுார், கோவை மண்டல இணை பதிவாளர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'இந்த முறையை, உயர்மட்ட அளவில் விரிவாக ஆராய்ந்து, பின் செயல்படுத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. 'இதனால், மறு உத்தரவு வரும் வரை, பரீட்சார்த்த முறையை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.



சிந்து நதி கமிஷன் கூட்டம்: டில்லியில் இன்று துவக்கம்
சிந்து உள்ளிட்ட நதி நீரை இந்தியா - பாகிஸ்தான் பகிர்ந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிஷனின், 114வது கூட்டம், டில்லியில் இன்று(மார்ச் 29) துவங்குகிறது.  பியாஸ், சட்லஜ், ரவி, செனாப், ஜீலம் மற்றும் சிந்து நதி நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே, 1960ல், சிந்து நதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, நதிநீரைப் பகிர்ந்து கொள்வது, அதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, நிரந்தர சிந்து கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த கமிஷனின் கூட்டத்தை, இரு நாட்டிலும், மாறி மாறி நடத்தப்பட வேண்டும். இதன் கடைசி கூட்டம், கடந்தாண்டு மார்ச்சில், இஸ்லாமாபாதில் நடந்தது. கமிஷனின், 114வது கூட்டம், டில்லியில், இன்று மற்றும் நாளை(மார்ச் 29, 30) நடக்கிறது. 



மியான்மர் புதிய அதிபர் தேர்வு
ஆங் சான் சூகியின் கட்சியைச் சேர்ந்த வின் மையின்ட் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட் டார்.


ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்தியாவின் முஸ்கான்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிபர் பிரிவில் இந்தியாவின் முஸ்கான் 35 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தத் தொடரில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற 4-வது தங்கப் பதக்கமாக இது அமைந்தது. சீனாவின் கின் சிஹாங் 34 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்தின் கன்யாகோர்ன் ஹிரன்போம் 26 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.அதேவேளையில் 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது. முஸ்கான், மனு பாகர், தேவன்ஷி ரானா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கத்தையும் கவுர், மகிமா துர்கி அகர்வால், தனு ராவல் ஆகியாரை உள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது. தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் நருகா, ஆயுஷ் ருத்ரராஜூ, 
குர்னிலால் சிங் கர்ச்சா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. அதேவேளையில் ஸ்கீட் தனிபர் பிரிவில் நருகா இறுதிச் சுற்றில் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.  இந்தத் தொடரில் இந்தியா 9 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 9 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலத்துடன் மொத்தம் 25 பதக்கங்கள் பெற்று முதலிடம் வகிக்கிறது.














EmoticonEmoticon